அழிந்து வரும் அரியவகை விலங்கினமான சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன உயிர்களின் அழிவுப் பட்டியலில் புலி, சிறுத்தை, மண்ணுளி பாம்பு, மான் போன்றவற்றின் வரிசையில் தற்போது சோலை மந்தி என்று அழைக்கப்படும் சிங்கவால் குரங்குகளும் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவில் மகாராஷ்டிரம், கோவா, தமிழகம், கேரளம், கர்நாடகத்தில் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மாலையில் உள்ள அடர்ந்த காடுகளில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் வசித்து வந்தன. ஆனால் தற்போது மகாராஷ்டிரம், கோவாவில் இந்த இனம் அழிந்து விட்டது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கேரள வனப்பகுதியான சைலன்ட் வேலி எனப்படும் அமைதிப் பள்ளத்தாக்கு, தேனி, களக்காடு, பொள்ளாச்சி-வால்பாறை செல்லும் சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் மட்டுமே இந்தவகை குரங்குகள் உள்ளன. இதன் உடலானது கருப்பு மற்றும் பழுப்பு நிறத்திலும், தலை மற்றும் முகத்தை சுற்றிலும் வெள்ளை நிறத்திலும் காணப்படும். இரண்டு அடி உயரம், அதிகபட்சம் 10 கிலோ வரை எடை கொண்ட இந்த குரங்கள் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது. இதன் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி ஆகும்.
இதன் வாலின் ஒரத்தில் காணப்படும் குடுமி சிங்கத்தின் வாலைப் போன்று அமைப்பில் காணப்படுவதால் சிங்கவால் குரங்கு என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மரத்துக்கு மரம் தாவும் குணம் கொண்ட இந்த குரங்குகள் காட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வகையான மரங்களின் பழம், கொட்டைகள், பூக்களை மட்டுமே உட்கொண்டு உயிர் வாழ்கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் 19 ஆயிரத்து, 388 சதுர பரப்பு கிலோ மீட்டருக்கு காப்புக் காடுகளாகவும், 2,183 சதுர பரப்பு கிலோமீட்டர் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகவும், 1,306 சதுர பரப்பு கிலோ மீட்டர் திறந்த வெளி காடுகளாகவும் உள்ளது. இதில், 22 ஆயிரத்து 877 சதுர பரப்பு கிலோமீட்டரில் வனப் பகுதியாக உள்ளது.
இதில், வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்துள்ளது. இதனால், வனப்பகுதியின் பரப்பளவு குறைவதாலும், வனத்தில் உள்ள மரங்களை வெட்டுவதாலும் இவை அதிக அளவில் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் காடுகளில் உள்ள உணவுகளை மட்டுமே உட்கொண்ட இவைகள் சமீபகாலமாக வால்பாறை சாலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் சிக்கி இறந்து வருவதும் தொடர்கிறது..
இந்நிலையில்,கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2.500-க்கும் குறைவான சிங்கவால் குரங்குகள் இருப்பது தெரிய வந்தது. ஆண்டுக்கு சுமார் 50 குரங்கள் இறந்து வருவதும் தெரியவந்துள்ளது.
எனவே, இந்த அரியவகை குரங்கினத்தை பாதுகாக்கும் விதமாக வால்பாறை சாலையில் வாகனங்களை மெதுவாக செல்லவும், காடுகளை அழிப்பதை தவிர்த்து வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும். இல்லையெனில், இன்னும் சில ஆண்டுகளில் இந்த சிங்கவால் குரங்குகள் முற்றிலும் அழிந்து வண்டலூர், மைசூர் அல்லது திருவனந்தபுரத்திலுள்ள வன உயிரியல் பூங்காக்களில் மட்டுமே சிங்கவால் குரங்குகளை பார்க்க முடியும்.
இதுகுறித்து வால்பாறை வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் சாலையை கடக்கும் போது இந்த குரங்குகள் அடிபட்டு இறக்கின்றன. சாலையில் வாகனங்களில் மோதி சிங்கவால் குரங்குகளின் இறப்புகளை தடுக்கும் விதமாக புதுத்தோட்டம் பகுதியில் 5 இடங்களில் சாலைகளின் குறுக்கே பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை மற்றும் மாலை வேளைகளில் வால்பாறை மற்றும் அதனைச்சுற்றியுள்ள குடியிருப்புப்பகுதிகளில் ஊடுருவுவதை தடுக்கும் விதமாக வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் கண்காணிப்பும் பணியில் ஈடுபட்ட வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.