காவல் நிலையங்களும், மாநில மகளிர் ஆணையமும் சரியாகச் செயல்பட்டால் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில் தீர்வு ஏற்படும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக் குழு உறுப்பினர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோவை, சென்னை ஆகிய இரு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான நிலுவை வழக்குகளை விசாரணை செய்யும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகளுக்குத் தீர்வு காணும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ரேகா சர்மா, சட்ட வல்லுநர் ரஞ்சனி ராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் வழக்குகளை விசாரித்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில் ரேகா சர்மா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
கோவையில் 2 நாள்களாக நடைபெற்ற விசாரணையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த நிலுவை வழக்குகளும், மகளிர் ஆணையத்துக்கு கொண்டு வரப்பட்ட வழக்குகளும் விசாரிக்கப்பட்டன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் 100 வழக்குகளும், கோவையில் 40 வழக்குகளும் விசாரிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளைப் பார்க்கும்போது, தமிழகத்தில், குடும்ப வன்முறை சம்பவங்களாலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அதேபோல், குடும்பங்களுக்குள்தான் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்களும் அதிகமாக நடப்பது தெரியவருகிறது.
ஒரு சில வழக்குகளில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது தெரியவந்தது. அதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்குப் பரிந்துரைத்துள்ளோம். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலேயே புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
உடை போன்ற காரணங்களை முன்வைத்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்துவதும் சரியல்ல. பெண்கள் மீதான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 33 ஆயிரம் வழக்குகளை மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது.
அதில், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியாணா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. கௌரவக் கொலைகளும் வடமாநிலங்களில்தான் அதிகம் நடக்கின்றன. தென் மாநிலங்களில் இப்பிரச்னை குறைவுதான். தலைநகர் தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு அங்குள்ள மக்கள் பெருக்கமும், அதற்கேற்ப காவல் துறை எண்ணிக்கை குறைவுமே காரணமாகும்.
தேசிய மகளிர் ஆணையம் முத்தலாக் முறைக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் உள்ளது. மகளிர் ஆணையத்தின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்கும்பட்சத்தில் அந்தக் கருத்தை நீதிமன்றத்தின் முன்வைப்போம். காவல் துறையினரும், மாநில அளவிலான ஆணையங்களும் சரியாகச் செயல்பட்டால் தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கே அவசியம் இல்லை. மகளிர் ஆணையத்தால் நடவடிக்கைக்குப் பரிந்துரைக்க முடியுமே தவிர நேரடியாக நடவடிக்கை எடுக்க இயலாது. இருப்பினும் அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.