கோயம்புத்தூர்

மின்வேலியில் சிக்கி யானை சாவு: தோட்ட உரிமையாளர் கைது

DIN

சிறுமுகை அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 சிறுமுகை, அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் விளைநிலங்களைச் சுற்றிலும் குறைந்த அழுத்த மின்வேலியை விவசாயிகள் அமைத்துள்ளனர்.
 இந்நிலையில், சிறுமுகையை அடுத்த சிட்டேபாளையத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவரது தோட்டத்தில் காட்டு யானை இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிறுமுகை வனச் சரகர் மனோகரன், இது குறித்து மாவட்ட வனத் துறை நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
 அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன், கால்நடை மருத்துவர் அசோகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று, அமர்ந்த நிலையில் இறந்து கிடந்த காட்டு யானையின் உடலை ஆய்வு செய்தனர். யானையின் தும்பிக்கையில் மின்சாரம் பாய்ந்ததற்கான அடையாளம் இருப்பது தெரியவந்தது.
 விசாரணையில், தோட்டத்து மின்வேலியில் சட்டத்துக்குப் புறம்பாக உயர் அழுத்த மின்சாரம் செலுத்தப்பட்டிருந்ததும், காட்டு யானை அந்தப் பாதையை கடக்க முயன்றபோது, இந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தோட்ட உரிமையாளர் வரதராஜனை வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத் துறையினர் கைது செய்து, மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
 உயிரிழந்த யானையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த பின்னர் கால்நடை மருத்து வர் அசோகன் கூறுகையில், மின்வேலியில் சிக்கி இறந்தது 15 வயதுள்ள ஆண் யானை ஆகும். உடலில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்ததினால் அது உயிரிழந்துள்ளது என்றார். அதே பகுதியில் இந்த யானையை வனத் துறையினர் புதைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT