ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி இருவர் காயம்
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வந்த ஆம்புலன்ஸ் புதன்கிழமை மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர்.
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வந்த ஆம்புலன்ஸ் புதன்கிழமை மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர்.
வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள்(65). இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் வால்பாறை அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆம்புலன்ஸ் அங்கலக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நாய் குறுக்கிட்டதால், ஓட்டுநர் கனகபாண்டியன்(40) ஆம்புலன்ஸை வேறு திசைக்குத் திருப்பியுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலை ஓரத்தில் இருந்து புளியமரத்தில் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கனகபாண்டியன் பலத்த காயமடைந்தார்.
உடல் நிலை சரியில்லாமல் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட செல்லம்மாளுக்கு காயம் ஏற்படவில்லை. அவருடன் உதவிக்கு வந்த ஈஸ்வரன்(50) காயமடைந்தார். இதையடுத்து, வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கனகபாண்டியன் கோவை அரசு மருத்துவமனைக்கும், செல்லம்மாள், ஈஸ்வரன் ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.