சூலூர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணி: நிலத்தின் உறுதித் தன்மை குறித்து பொது மக்கள் கேள்வி
சூலூர் அருகே அமைக்கப்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நிலத்தின் உறுதித் தன்மை குறித்துப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சூலூர் அருகே அமைக்கப்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நிலத்தின் உறுதித் தன்மை குறித்துப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சூலூர் அருகே, புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த ஜனவரி 20-ஆம் தேதி தமிழக அமைச்சர், சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தப் பேருந்து நிலையம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதி இதற்கு முன்னர் பாதியளவு பெரியார் நகர் எனும் பெயரில் பொது மக்கள் வசிப்பிடமாகவும், மீதிப் பாதிப் பகுதி கல் உடைத்த 60 அடி ஆழக் குழியாகவும் இருந்தது.
பெரியார் நகர்ப் பகுதி ஆக்கிரமிப்பு என கூறி அங்கிருந்த வீடுகள் அதிகாரிகளால் கடந்த வருடம் அகற்றப்பட்டிருந்தன. பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட மீதிப்பகுதி கல்குழியாக இருந்ததில் சூலூர் பேரூராட்சியின் குப்பைக் கிடங்கில் இருந்த குப்பைகளைக் கொட்டி சமப்படுத்தப்பட்டது. மேலும் பவுண்டரியில் இருந்து காஸ்டிங் மண் எடுத்து வந்தும் நிரப்பப்பட்டது.
அந்த இடமே தற்போது பேருந்து நிற்கும் அரசுப் பேருந்து பணிமனைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குழி தோண்டியபோது பிளாஸ்டிக் கழிவுகளும், காஸ்டிங் மண்ணும், குப்பையும் வந்ததுள்ளன.
மேலும், அந்தக் குழியில் தண்ணீரும் ஊறத் தொடங்கியது. இதையடுத்து, அந்த பகுதி கட்டுமானத்துக்கு உகந்த பகுதியா என எனவும், நிலத்தின் உறுதித் தன்மையை அறிய மண் பரிசோதனை நடத்தப்பட்டதா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, நீலாம்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கூறியதாதவது:
சமீபத்தில் சோமனூர் பகுதியில் பேருந்து நிலையக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், சூலூரில் பேருந்து நிலையக் கட்டடம் கட்டுவதில் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதால் சூலூர் பேருந்து நிலையக் கட்டடத்தின் உறுதித்தன்மை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. பின்னாளில் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க அரசு தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடத்தின் உறுத்தித் தன்மையைச் சோதிக்கும் வகையில் அப்பகுதியில் மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், தற்போதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடத்தின் உறுதித் தன்மையையும் கண்டறிய வேண்டும் என்றார்.