கோவையில் ஏர்செல் நெட்வொர்க் சேவை திடீர் முடக்கம்
கோவையில் ஏர்செல் நெட்வொர்க் சேவை திடீரென முடங்கியதால் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவையில் ஏர்செல் நெட்வொர்க் சேவை திடீரென முடங்கியதால் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏர்செல் நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சேவை கடந்த சில நாள்களாகவே பாதிக்கப்பட்டது. எனினும், ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் சிக்னல் கிடைத்து சேவை தொடங்கியதால் வாடிக்கையாளர்களும் பெரியதாக பாதிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், கோவையில் திடீர் என புதன்கிழமை காலை முதல் ஏர்செல் சேவை முற்றிலுமாக முடங்கியது. இதனால் இந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஏர்செல் நெட்வொர்க் செல்லிடப்பேசி சேவையை பொது மக்கள் மட்டுமின்றி அதிக அளவிலான அரசு நிறுவனங்களில் சியூஜி சேவை பயன்பாட்டில் உள்ளது. சில தனியார் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களும் ஏர்செல் சியூஜி சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவை பாதிப்பால் இவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஹுசூர் சாலையில் உள்ள ஏர்செல் தலைமை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். அப்போது, ஏர்செல் ஊழியர்களிடம் சில வாடிக்கையாளர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்களில் பலரும் தங்களது போஸ்ட்பெய்ட் இணைப்பில் சில ஆயிரங்களை டெபாசிட் தொகைகளாகவும் வைத்துள்ளனர். அத்தகையை வாடிக்கையாளர்கள் சிலர் ஆத்திரமடைந்து தர்னாவிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வாடிக்கையாளர்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.
தாற்காலிக மையங்களை அமைத்த மற்ற நிறுவனங்கள்: இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ஏர்செல் அலுவலகம் முன்பு திடீரென ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் சார்பில் குடைகள் அமைக்கப்பட்டு அந்நிறுவனங்களின் சிம்கார்ட் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
ஏர்டெல், பிஎஸ்என்எல் சிம்கார்ட் வாங்க குவிந்த வாடிக்காயளர்கள்: ஏர்டெல் நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் பலரும் திடீரென ஏர்செல், பிஎஸ்என்எல் சிம்கார்ட் விற்பனை மையங்களில் குவிந்தனர். மேலும், ஆதார் எண் கொடுத்து புதிய சிம்கார்டை வாங்கினர். பெரும்பாலன சிம்கார்ட் விற்பனை மையங்களில் அதிகமாக பொதுமக்கள் திரண்டனர்.
இன்னும் ஒரு சில நாள்களில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஏர்செல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.