கோயம்புத்தூர்

குப்பைகளை மறு சுழற்சி செய்வதில் முன்மாதிரியாகத் திகழும் மதுக்கரை பேரூராட்சி: நீர்நிலைகளை மாசுபடுத்துவதை நிறுத்துமா ?

சேகரிக்கப்படும் குப்பைகளை மறு சுழற்சி செய்வதில் மற்ற பேரூராட்சிகளுக்கு முன் மாதிரியாக கோவை மாவட்டம், மதுக்கரை பேரூராட்சி

ஆர். தர்மலிங்கம்

சேகரிக்கப்படும் குப்பைகளை மறு சுழற்சி செய்வதில் மற்ற பேரூராட்சிகளுக்கு முன் மாதிரியாக கோவை மாவட்டம், மதுக்கரை பேரூராட்சி நிர்வாகம்  திகழ்கிறது. அதே வேளையில், பாறைக்குழியில் குப்பைகளைக் கொட்டி நீர்நிலைகளை மாசுபடுத்துவதிலும் இப்பேரூராட்சி நிர்வாகம் தனி இடம் பிடித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
கோவை மாவட்டத்துக்கு உள்பட்டது மதுக்கரை சிறப்பு நிலை பேரூராட்சி. இந்தப் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். 
இங்குள்ள வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க மதுக்கரை மார்க்கெட் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் உரக் கிடங்கு உருவாக்கப்பட்டது.
அதேவேளை குப்பைகளை மறு சுழற்சி செய்து மீண்டும் உபயோகப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.  
இதையடுத்து, மதுக்கரை பேரூராட்சி நிர்வாகம், தனியார் சிமெண்ட் ஆலை நிறுவனத்துடன் சேர்ந்து, மதுக்கரை மார்க்கெட் சாலையில்  வளம், மீட்பு பூங்காவை 2016-ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளது. இந்தப் பூங்காவைச் சுற்றிலும் தருமபுரியில் இருந்து கொண்டுவரப்பட்ட 100 மூங்கில் மரங்கள் நடப்பட்டுள்ளன. குப்பைக் கிடங்கில் பணியாற்றும் ஊழியர்கள் ஆக்சிஜன் குறைவால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த மூங்கில் மரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுகின்றன. 
 மேலும், தனியார் ஆலையால் பணியமர்த்தப்பட்ட பெண்கள் 18 வார்டுகளிலும், அதிகாலை வேளைகளில் சென்று அங்குள்ள மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து பேரூராட்சி வாகனங்களில் இங்கு கொண்டுவருகின்றனர். வீடுகளில் கழிவுகளாக வீசப்படும் காய்கறிகள், பழங்களைத் தனியாகவும், பழைய துணிகள், காலணி உள்ளிட்ட பொருள்களைத் தனியாகவும் பிரித்து எடுக்கின்றனர். தேங்காய் தொட்டி, ஊசி, கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் அட்டைப் பெட்டிகள், பால் பாக்கெட் பேப்பர் போன்றவற்றையும் தனியாகப் பிரிக்கின்றனர். இதில், பாலிதீன் பைகளைத் தனியாகப் பிரித்து விற்பனை செய்து விடுகின்றனர். செய்தித்தாள்கள், காகிதங்களை அட்டை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். 
காய்கறிகள், பழங்களை, பாதிக்குப் பாதி பழைய குப்பைகளுடன் சேர்த்து ரசாயனத்துடன் கலந்து ஒரு டன் அளவுக்குத் தனியாக வைத்துவிடுகின்றனர். அதன்பின் 15 நாள்கள் கழித்து குப்பைகளைத் திருப்பிப் போடுகின்றனர்.
 பின்னர் மீண்டும் 15 நாள்கள் என 45 நாள்களில் இயற்கை உரம் தயாரிக்கின்றனர். இந்த இயற்கை உரங்களை கிலோ ரூ. 10-க்கு விவசாயிகள் மற்றும் அப்பகுதியில் தோட்டம் அமைத்திருப்பவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். 
அதேவேளையில், மண்புழு உரம் தயாரித்து கிலோ ரூ. 15-க்கு விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டிக் பொருள்களை அரைத்துத் தனியாகத் துகள்களாக்கி விற்கின்றனர். இந்தத் துகள்களானது பிளாஸ்டிக் சாலைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதே வேளையில், தெர்மாகோல் போன்ற மக்காத கழிவுகளை சிமெண்ட் ஆலைக்கு கொடுத்து விடுகின்றனர். அங்கு அவர்கள் 2,000 டிகிரியில் எரித்து, அதில் கிடைக்கும் பொருள்களை சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.
அதேவேளையில், மக்காத குப்பைகள் ஒரு சிலவற்றை வாகனங்களில் ஏற்றி மதுக்கரை புறவழிச் சாலையில் உள்ள பாறைக்குழியில் கொட்டி, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பாறைக்குழியில் உள்ள நீரை துணி துவைப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியாத நிலையால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேரூராட்சி ஊழியர்களே வாகனங்களில் எடுத்துச் சென்று கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 
இறைச்சிக் கழிவுகள் கலப்பு: இதனிடையே, பாறைக்குழியில் உள்ள கழிவுகளுடன் கேரளத்தில் இருந்து வரும் வாகனங்கள் இரவு நேரங்களில் கோழி, மீன் இறைச்சிக் கழிவுகள், மருந்துக் கழிவுகளையும் கொட்டிச் செல்கின்றனர். இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் விடுத்த கோரிக்கையால் அண்மையில் பாறைக்குழிக்குச் செல்லும் இரு வழிகளிலும் இரும்புத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 
மேலும், பாறைக்குழியைச் சுற்றிலும் ஒரு புறம் தகரத்தால் மறைத்துப் பூட்டுப் போடப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தடுப்புகளையும் மீறி சிலர் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். 
எனவே, கோவை மாவட்டத்தில் மற்ற பேரூராட்சிகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் மதுக்கரை சிறப்பு நிலைப் பேரூராட்சி, குப்பைகளை பாறைக்குழியில் கொட்டி, நீர்நிலைகளை அசுத்தப்படுத்திவருவது மற்ற பேரூராட்சிகளுக்குத் தவறான முன்மாதிரியாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்:
 இதுகுறித்து, மதிமுக இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் கூறியதாவது:
 குப்பைகளைத் தரம் பிரித்து மீண்டும் மறு சுழற்சி செய்வதில் மதுக்கரை பேரூராட்சி சிறப்பாக விளங்குகிறது. ஆனால், அதே பேரூராட்சி, பாறைக்குழியில் கழிவுகளைக் கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கெனவே புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பாறைக்குழியில் உள்ள தண்ணீர் பயன்படுத்த முடியாததுடன், நிலத்தடி நீர்மட்டமும் மாசடைகிறது. 
மேலும், பகல் வேளைகளில் பேரூராட்சி ஊழியர்களே குப்பைகளுக்குத் தீவைத்துக் கொளுத்துவதால் எழும் புகையால் ராஜேஸ்வரி நகர், மதுக்கரை மார்க்கெட், மரப்பாலம் போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி, பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என்றார். 
இதுகுறித்து, மதுக்கரை பேரூராட்சி சுகாதாரத் துறை அலுவலர் திருவாசகம் கூறியதாவது: வளம், மீட்பு பூங்காவில் தயாரிக்கப்படும் இயற்கை, மண்புழு உரங்களைக் குறைவான விலைக்கு விற்பனை செய்கிறோம். 
மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள காய்கறித் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்.
 டெங்கு கொசுக்களை அழிக்கும் மீன்களையும் வளர்த்து வருகிறோம். அவற்றையும் பொதுமக்கள் கேட்கும்போது அவர்களது வீடுகளில் உள்ள நீர்நிலைகளில் விட்டு கொசுக்களை அழிக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம். 
மேலும், பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதைத் தற்போது நிறுத்தி விட்டோம். அனைத்துக் குப்பைகளையும் இந்தப் பூங்காவிலேயே கொட்டித் தரம்பிரித்து, மறு சுழற்சி செய்வதற்குத் தேவையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT