பொள்ளாச்சியில் பிஏபி அலுவலகத்துக்குப் பூட்டுப் போட முயன்றவர்கள் கைது
பொள்ளாச்சியில் உள்ள பிஏபி அலுவலகத்துக்குப் பூட்டுப்போட முயன்ற 15 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில் உள்ள பிஏபி அலுவலகத்துக்குப் பூட்டுப்போட முயன்ற 15 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஆழியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய 7.25 டிஎம்சி தண்ணீரை உடனடியாக முழுமையாக வழங்க வலியுறுத்தி கேரள சித்தூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணன் குட்டியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சிறுவாணி அணையில் இருந்து அதிக நீரை கேரளப் பகுதிக்கு அந்த மாநில அதிகாரிகள் திறந்துவிட்டனர். சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரை அடைக்க வேண்டும் என்றால் பிஏபி திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு உடனடியாக நீரைத் திறந்துவிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர்.
இதையடுத்து, பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்குச் செல்லும் நீரை ஆழியாறு அணைக்குத் தமிழக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை திருப்பிவிட்டு, அங்கிருந்து கேரளத்துக்கு விநாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீரைத் திறந்துவிட்டனர்.
கேரளத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு அரசாணைப்படி, பாசனத்துக்கு இரண்டு சுற்றுத் தண்ணீர் வழங்க வலியுறுத்தியும், கேரளத்துக்குப் பரம்பிக்குளம் அணையில் இருந்து நீர் வழங்குவதை நிறுத்தக் கோரியும் பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே, பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்குத் தமிழக அரசு அழைப்பு விடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயப் பிரதிநிதிகள் சென்னை சென்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், திமுக நகரச் செயலாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 35-க்கும் அதிகமானோர் பொள்ளாச்சியில் பிஏபி அலுவலகம் முன்பு புதன்கிழமை காலை திரண்டனர். அப்போது, கேரளத்துக்கு வழங்கும் தண்ணீரை உடனடியாக நிறுத்தக் கோரியும், தமிழக பாசனப் பகுதிக்குத் தண்ணீர் வழங்க வலியுறுத்தியும் பிஏபி அலுவலகத்துக்குப் பூட்டுப்போட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் பேச்சு
வார்த்தை: பிஏபி திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமையில் 9 பேர் அடங்கிய விவசாயப் பிரதிநிதிகள் சென்னைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பொதுப் பணித் துறைச் செயலாளர் பிரபாகரன், மின் வாரிய முதன்மைப் பொறியாளர் சந்திரபோஸ் ஆகியோருடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் மகேந்திரன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வியாழக்கிழமையும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.