உலக தண்ணீர் தினம்நொய்யல் ஆற்றின் நீரை பொதுமக்களுக்கு வழங்கிய தன்னார்வலர்கள்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளின் தன்னார்வலர்கள் மாநகர மக்கள் பருகுவதற்காக நொய்யல் ஆற்றின் நீரை விநியோகம் செய்தனர்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளின் தன்னார்வலர்கள் மாநகர மக்கள் பருகுவதற்காக நொய்யல் ஆற்றின் நீரை விநியோகம் செய்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைக் கடந்து கரூரில் நொய்யல் எனும் ஊரில் காவிரியுடன் கலக்கிறது நொய்யல் ஆறு. மழைக் காலங்களில் வெள்ளம் செல்லும்போது இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான குளம் குட்டைகளை நிரப்பி, குடிநீர், விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்த ஆறு, மழை இல்லாத காலங்களில் சாக்கடைக் கழிவுகளையே சுமந்து செல்கிறது.
தோன்றும் இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரையிலும், அதாவது நகரை அடையும் வரையிலும் பருகும் நிலையில் இருக்கும் இந்த ஆற்றின் நீர், அதன்பின் சாக்கடைக் கழிவுகள், குப்பைக் கூளங்களால் கழிவு நீர் ஓடையாக மாறிவிடுகிறது.
இந்நிலையில், உலக தண்ணீர் தினத்தையொட்டி, நொய்யலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மாநகர மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சிறுதுளி ஆகிய அமைப்புகளின் தன்னார்வலர்கள், வனத் துறை அனுமதியுடன் நொய்யல் ஆற்றுக்கு நீரை வழங்கும் சுனைகளில் இருந்து நீரைச் சேகரித்து மாநகர மக்களுக்கு வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி, நொய்யல் சுனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரை, காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்கள், டவுன்ஹால், மாநகராட்சி அலுவலகம், ரேஸ்கோர்ஸ், லட்சுமி மில்ஸ், ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட 8 இடங்களில், அதிவிரைவுப் படை கமாண்டோக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200 தன்னார்வலர்களின் உதவியுடன் 20 ஆயிரம் பேருக்கு வழங்கினர்.
மேலும், மேற்கண்ட இடங்களில் நொய்யல் ஆறு உற்பத்தியாகும் இடங்களில் கிடைக்கும் நீரின் மாதிரி, உக்கடம், வாலாங்குளம், குறிச்சி, சிங்காநல்லூர், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் இருக்கும் நீரின் மாதிரியையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.
தண்ணீர் தினத்தையொட்டி நொய்யல் வாழ்வு மையத்தில் சி.ஜி.எஸ்.மணியன் நொய்யலை அறிவோம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதேபோல, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பிஷப் அப்பாசாமி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர், நீர்நிலைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.