கோவை மாநகராட்சியில் வரி வசூல் தீவிரம்
நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை வசூலிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை வசூலிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 2017-18 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரி நிலுவைகளை செலுத்த வசதியாக மார்ச் மாதம் முதல் சிறப்பு வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி சார்பில் 2017-18 ஆம் ஆண்டில் சொத்து வரியாக ரூ. 149 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது ரூ.138.11 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு அடுத்து வரும் விடுமுறை நாள்களான 4 நாள்களும் வரி வசூல் மையங்கள் இயங்கும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் 93.3 சதவீதம் அளவுக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்த தவறியவர்களின் வீடு மற்றும் கட்டடத்தின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், கட்டடங்களுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். மார்ச் 31-ஆம் தேதிக்குள் நடப்பு ஆண்டு வரி மற்றும் நிலுவை வரிகள் முற்றிலும் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.