சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 7ஆண்டு சிறை
கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றம் 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றம் 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
மதுரை மாவட்டம், பைகாரா, இ.பி. பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் தினேஷ்குமார் (24). இவர், கோவை, இடையர்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை தினேஷ்குமார் மதுரைக்கு காரில் 2014 ஜூன் 26-ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அதே ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி திருப்போரூரில் வைத்து சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். மேலும், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் தினேஷ்குமார் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போஸ்கோ) குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக தினேஷ்குமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கானது கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி (பொறுப்பு) ஜி.விஜயா செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், தினேஷ்குமாருக்கு கடத்தல் குற்றத்துக்கு 7 ஆண்டும், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 ஆண்டும் சிறைத் தண்டனை விதித்தார். இந்தத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் சரோஜினி ஆஜரானார்.