பொள்ளாச்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம்புதூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம்புதூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 15- ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கோமங்கலம் புதூரில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 90 குழுக்கள் மூலம் மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் 84.50 லட்சம் மாடுகள், 9.40 லட்சம் எருமைகள் ஆகியவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்படும். இதற்கான பணியில் 2 ஆயிரத்து 246 குழுக்கள் ஈடுபட்டுள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் காயத்ரி, கால்நடைத் துறை கோவை மண்டல இணை இயக்குநர் புருஷோத்தமன், கோவை மாவட்ட கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் சங்கர், கால்நடைத் துறை உதவி இயக்குநர் திருக்குமரன், உதவி மருத்துவர்கள் கருப்பையா, அன்பழகன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.