கோயம்புத்தூர்

ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறையினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

DIN

ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறையினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காண்டூர் கால்வாய் பகுதியில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி சிறுத்தை ஒன்று சுருக்கு வைத்து கொலை செய்யப்பட்டு அதன் நகம், பற்கள் திருடப்பட்டிருந்தன. சுருக்கு வைத்த ஆதாரத்தை மறைப்பதற்காக சிறுத்தை தலை முழுவதுமாக வெட்டி அகற்றப்பட்டிருந்தது. 
இதுதொடர்பாக வனத் துறையினர், பந்தக்கல் அம்மன்பதியைச் சேர்ந்த சிலரை ஆழியாறு சோதனைச் சாவடிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  அப்போது அங்கு சென்ற 30-க்கும் மேற்பட்டோர் வனத் துறையினரை மிரட்டி விசாரணை வளையத்தில் இருந்தவர்களை அழைத்துச் சென்றனர்.                                                                                                       மேலும் வனத் துறை அலுவலகம்,  சார் ஆட்சியர் அலுவலகம்,  ஆழியாறு சோதனைச்சாவடி முன்பு தொடர் போராட்டங்களை நடத்தினர். 
வனத் துறையினர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஆழியாறு காவல் நிலையம், சார் ஆட்சியர் அலுவலகங்களில் புகார் தெரிவித்தனர். 
வனத் துறையைச் சேர்ந்தவர்கள் வருவாய்த் துறை, போலீஸார், வனத் துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு விளக்கம் கொடுத்து வந்தனர். 
இதைத் தொடர்ந்து,  சிறுத்தை வேட்டை பிரச்னை தொடர்பாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரியை விசாரணை அதிகாரியாக நியமித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  இதுதொடர்பாக  சிறுத்தையை வேட்டையாடிதாக வனத் துறையால் சந்தேகிக்கப்படும் நபர்களிடமும்,  வனத் துறையினரிடம் வரும் 26 ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளதாக சார் ஆட்சியர் அறிவித்திருந்தார். 
இந்நிலையில்,  வனத் துறையினர் மீது மூன்று பிரிவுகளில் ஆழியாறு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்த சம்பவம் தமிழக வனத் துறை வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இயற்கை ஆர்வலர்களும் அதிருப்தி அடைந்துள்ளதுடன், கண்டனமும் தெரிவித்துள்ளனர். 
வனக் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரை போலீஸார் பெற்று வனத் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்வது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்றும் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். வனத் துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பந்தக்கல் அம்மன்பதியைச் சேர்ந்த பரமசிவம் உள்பட சிலர் மீதும் சில பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறியதாவது: 
காட்டில் வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. புலி, சிறுத்தை வேட்டை என்பது சாதாரண நபர்கள் செய்வது அல்ல. இதுபோன்ற விலங்குகளை வேட்டையாடுபவர்கள், விற்பவர்கள் சர்வதேச அளவில் தொடர்பில் இருப்பவர்கள்.  ஆகவே சிறுத்தை, புலி வேட்டை போன்றவற்றில் அதை வேட்டையாடியவர்கள் மட்டுமில்லாமல் அதை விற்பனை செய்பவர்கள் வரை அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை கொல்லப்பட்ட பிரச்னை அங்கு வேட்டைத் தடுப்புக் குறைவாக இருப்பதுடன், அங்கு புலி, சிறுத்தை போன்ற வன உயிரினங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதையும் வெளிக்காட்டுகிறது. ஆகவே அங்கு வேட்டை தடுப்பை அதிகப்படுத்த வேண்டும். தற்போது சிறுத்தை நகம், பற்கள்  எடுக்கப்பட்ட பிரச்னையில் சிலர் மீது வனத் துறை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்படி விசாரணை வளையத்துக்குள் இருப்பவர்கள் வனத் துறைக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்து, வனத்துறையினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது என்றார்.  
இந்து மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறுகையில், குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுவர்கள் மீது போலீஸாரும் விசாரணை நடத்தித்தான் நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல், வனத் துறையினரும் வனக் குற்றம் செய்ததாக சந்தேகிக்கும் நபர்களை விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. விசாரணை வளையத்திற்குள் வந்தவர்கள், வனத் துறை மீது போலீஸில் புகார் தெரிவித்தவுடன், வனத் துறை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது வனத் துறையை செயல்பட முடியாதபடி செய்துவிடும். இனிமேல், சிறுத்தை, புலி என எந்த வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டாலும், எந்த வனக் குற்றங்கள் செய்தாலும் வனத் துறையினர் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவார்கள்.  மேலும், அரசியலில் பின்புலம் உள்ளவர்கள், போராட்ட குணம் உள்ளவர்கள் வனக் குற்றம் செய்தால் வனத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. இது தமிழக வனத்தின் பாதுகாப்புக்கு விடப்படும் சவால் என்றே கருதுகிறேன் என்றார்.
 இயற்கை ஆர்வலர் சுரேஷ் கூறுகையில், இயற்கைக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது. வனத் துறையினரின் விசாரணை பாதிக்கப்பட்டால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது. வனத் துறையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது அவர்களின் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT