வால்பாறை-பொள்ளாச்சி சாலையோரத்தில் காட்டுத் தீ
வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள தனியார் எஸ்டேட் பகுதியின் சாலையோரத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயால்
வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள தனியார் எஸ்டேட் பகுதியின் சாலையோரத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயால் வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாகப் பகல் நேரத்தில் வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் செடி, கொடிகள், மரங்களுடன், இலைகளும் காய்ந்து வருகின்றன.
இந்நிலையில், வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் சாலையோரத்தில் உள்ள அடர்ந்த செடிகள் வளர்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் காட்டுத் தீ பிடித்தது.
மேலும் காற்று வீசியதால் தீ வேகமாகப் பரவி செடிகள் அனைத்தும் தீயில் கருகின. காற்று வீசியதால் தீயின் தாக்கம் சாலை வரைக்கும் இருந்ததால், சுமார் 30 நிமிடம் வரையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.