கோயம்புத்தூர்

சர்தார் வல்லபபாய் படேல் கல்லூரியில் ஜவுளி, மேலாண்மை படிக்க மாணவர்கள் ஆர்வம்: மே 25-இல் நுழைவுத் தேர்வு

DIN

கோவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச ஜவுளி, மேலாண்மை கல்லூரியில் ஜவுளி, மேலாண்மை படிப்புகளில் சேர இதுவரை இல்லாத அளவுக்கு 3,500 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
 கோவை, பீளமேடு பகுதியில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச ஜவுளி, மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.எஸ்சி. டெக்ஸ்டைல் பட்டப்படிப்பு, எம்.பி.ஏ.-வில் ஜவுளி மேலாண்மை, ஆயத்த ஆடை மேலாண்மை, சில்லறை வர்த்தக மேலாண்மை போன்ற படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
  இதில் மொத்தம் 223 மாணவ-மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். பி.எஸ்சி. படிப்பில் சேர பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களும், எம்.பி.ஏ.வில் சேர ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
 இவர்கள் மத்தியப் பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். மத்திய அரசின் கல்வி நிறுவனம் ஒன்று கோவையில் இருப்பது குறித்து மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் கடந்த சில ஆண்டுகள் வரையிலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ,மாணவிகளே இங்கு சேர்ந்து பயின்று வந்தனர்.
 இந்த நிலையில், தற்போது இந்த கல்வி நிறுவனத்தில் சேர சுமார் 3,500 மாணவ,மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர் சி.ரமேஷ்குமார் கூறும்போது, கடந்த ஆண்டில் பயின்ற அனைவருக்கும் வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைத்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இங்கு நேர்முகத் தேர்வுக்கு வந்து நல்ல ஊதியத்தில் மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. அதேபோல் 7 மாணவர்கள் தொழில் முனைவோர்களாகவும் மாறியுள்ளனர். இங்குள்ள அதிநவீன ஆய்வகம், நூலகம் போன்றவை ஜவுளித் தொழில் சார்ந்து பயில்வோருக்கு பெரிய உதவியாக இருப்பதால், மாணவர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
 அதனாலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு 223 இடங்களுக்கு 3,500-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு மே 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT