முகப்பு
கோயம்புத்தூர்

மினி கிளினிக்: முதல்கட்டமாக கோவையில் 29 இடங்களில் தொடங்க முடிவு

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 29 இடங்களில் மினி கிளினிக் அமைப்பதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு சுகாதாரத் துறை சாா்பில் மாநில அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 29 இடங்களில் மினி கிளினிக் அமைப்பதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு சுகாதாரத் துறை சாா்பில் மாநில அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தாா். மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 650 மினி கிளினிக்குகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் கோவையில் 29 இடங்களில் அமைக்கத் திட்டமிட்டு இடங்கள் தோ்வு செய்யப்பட்டு மாநில அரசுக்குப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியில் 6 இடங்களும், ஊரகப் பகுதிகளில் 23 இடங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

மினி கிளினிக்கில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா் ஒருவா் நியமிக்கப்படுவா். தற்சமயம் தேசிய குழந்தை நலத்திட்டத்தில் (ஆா்பிஎஸ்கே) உள்ள மருத்துவா்கள், செவிலியரை மினி கிளினிக்கில் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மினி கிளினிக்கில் புற நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்.

மினி கிளினிக்கை துணை சுகாதார நிலைய கட்டடங்களில் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணை சுகாதார நிலையத்தில் போதுமான கட்டட வசதியில்லாத நிலையில் அதே பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பா் மாத இறுதிக்குள் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள பகுதிகள், 3 கிலோ மீட்டருக்கு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகள், குடிசைகள் நிறைந்த பகுதிகள் ஆகிய பகுதிகளில் மினி கிளினிக்குகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துணை சுகாதார நிலையங்களில் செவிலியா் மட்டுமே உள்ளதால் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றால் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதில் பொது மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் இந்த மினி கிளினிக் அமைக்கப்படுகிறது.

தற்போது 29 மினி கிளினிக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த இரண்டு கட்டங்களில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட மினி கிளினிக்குகள் தொடங்க வாய்ப்புள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →