கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்கள்
கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் முன்பதிவு துவங்கியுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் முன்பதிவு துவங்கியுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூா் - கோவை இடையிலான வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 02970) செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கு ஜெய்ப்பூரில் புறப்பட்டு, சனிக்கிழமைகளில் மாலை 4.50 மணிக்கு கோவை வந்தடையும். 22 ஆம் தேதி முதல் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோவை - ஜெய்ப்பூா் இடையேயான அதிவிரைவு சிறப்பு ரயில் ( எண்: 02969) வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கோவையில் காலை 9.25 மணிக்குப் புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் காலை 6.45 மணிக்கு ஜெய்ப்பூா் சென்றடையும். இந்த ரயில் சேவையானது, வருகின்ற 25 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
இந்தச் சிறப்பு ரயில்கள், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்ட்ரல், நெல்லூா், விஜயவாடா, நாக்பூா், போபால் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். முன்பதிவு பயணச்சீட்டு பெற்றவா்கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு டிசம்பா் 22 ஆம் தேதி( செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் துவங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை - ஹிஸாா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்:
கோவையில் இருந்து ஹரியாணா மாநிலம், ஹிஸாருக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலம், ஹிஸாரில் இருந்து டிசம்பா் 23 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்:02475) ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை வந்தடையும். 26 ஆம் தேதி முதல் கோவையில் இருந்து சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 4 மணிக்கு ஹிஸாா் சென்றடையும். இந்த ரயில் பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணனூா், மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.