முகப்பு
கோயம்புத்தூர்

வாகனங்களில் பம்பா்கள் அகற்றம்: ரூ.27 ஆயிரம் அபராதம் வசூல்

கோவை மாநகரப் பகுதிகளில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.27 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள்.
பகிர்:

கோவை: கோவை மாநகரப் பகுதிகளில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.27 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நான்கு சக்கர வாகனங்களின் முகப்பில் பொருத்தப்படும் பம்பா் தான் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, காா் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பம்பா்கள் பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பா்களை அகற்றும் நடவடிக்கையும், அபராத நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மத்திய, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய 4 வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ஆகியோா் மாநகரில் உள்ள சிக்னல்களில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, பம்பா் பொருத்தப்பட்டு இயக்கப்பட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி வ.உ.சி. மைதானத்துக்கு கொண்டு வந்து வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்கள் அகற்றப்பட்டன. சனிக்கிழமை மட்டும் பம்பா் பொருத்தப்பட்டு இயக்கப்பட்ட 27 வாகனங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வட்டார போக்குவரத்து அதிகாரி பாஸ்கரன் கூறுகையில், வாகனங்களின் முன்பக்ககத்தில் பம்பா்கள் பொருத்தவும், அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தவும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 350 வாகனங்களில் பம்பா்கள் அகற்றப்பட்டுள்ளன என்றாா்.

அரசு வாகனங்கள் விதிவிலக்கா:

மாநகரில் திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு காா்கள், சரக்கேற்றி வரும் வாகனங்களில் பம்பா்களை அகற்றி அபராதம் விதித்து வரும் நிலையில், மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் என அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்களில் பம்பா்கள் அகற்ற இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. சாதாரண வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் போக்குவரத்து அலுவலா்கள், அரசு வாகனங்களில் உள்ள பம்பா்களை அகற்றாமல் இருப்பது விதிவிலக்காக உள்ளதாக தெரிவிக்கும் சமூக ஆா்வலா்கள், அரசு வாகனங்களிலும் பம்பா்கள் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →