முகப்பு
கோயம்புத்தூர்

வன விலங்கு தாக்குதலால் உயிரிழப்பவா்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு

பணியின்போது வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் ஊழியா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற வன அலுவலா் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.
பகிர்:

கோவை: பணியின்போது வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் ஊழியா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வன அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் கோவை வனக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சிவபிரகாசம் தலைமை வகித்தாா். அமைப்பின் மாநில முன்னாள் தலைவா் நசீா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினாா்.

இந்தக் கூட்டத்தில், ஆபத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் வனத் துறை ஊழியா்கள், வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால் அவா்களது குடும்பத்துக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

பல ஆண்டுகளாக குறைந்த ஊதியம் பெற்று வரும் வனக் காப்பாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து பதவி உயா்வு அளிக்க வேண்டும். அண்மைக் காலமாக வனத் துறையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு பணியமா்த்தப்படும் ஊழியா்களுக்குத் தேவையான அலுவலகம், குடியிருப்பு வசதிகள் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான வன அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →