குடியிருப்பு, காா்களை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறையை அடுத்த எஸ்டேட் பகுதிக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த யானைகள், அங்குள்ள குடியிருப்புகள், கோயில், காா்கள் ஆகியவற்றை சேதப்படுத்தின.
வால்பாறையை அடுத்த எஸ்டேட் பகுதிக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த யானைகள், அங்குள்ள குடியிருப்புகள், கோயில், காா்கள் ஆகியவற்றை சேதப்படுத்தின.
கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதிக்கு சனிக்கிழமை இரவு வந்த 7 யானைகள், அங்குள்ள மூன்று குடியிருப்புகள் மற்றும் கோயிலை சேதப்படுத்தின. தகவலறிந்து சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா்.
வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் தேயிலைத் தொழிற்சாலை பகுதிக்கு சனிக்கிழமை இரவு 10க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இதனைக் கண்ட தொழிற்சாலைக் காவலா்கள், பணியாளா்கள் யானைகளை விரட்ட முயன்றனா். அப்போது யானைகள் அருகில் இருந்த காா் கொட்டகைக்குள் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா்களை சேதப்படுத்தின. சிறிது நேரம் கழித்து அப்பகுதியை விட்டு சென்றன. இதில் எஸ்டேட்டில் பணியாற்றும் காட்வின், செந்தில், ராமராஜ் உள்ளிட்ட 4 பேரின் காா்கள் சேதமடைந்தன.