கோயம்புத்தூர்

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்

DIN

கோவையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழுத் தலைவா் சு.பழனிசாமி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், கணியூா் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தி விட்டு செல்லும் வாகனங்கள் அடுத்த ஒரு சில கிலோ மீட்டா் தொலைவிலுள்ள நீலாம்பூா் சுங்கச் சாவடியில் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேபோல திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, மதுக்கரை வரையில் 6 இடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. சாலைகள் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில், ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தவிர மாதாந்திர பயண அட்டை சலுகையும் ரத்து செய்யப்பட்டு, நாளொன்றுக்கு வாகனங்களின் இயக்கத்துக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூா் மக்கள், விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்துப் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும்

கோவை, வடவள்ளியைச் சோ்ந்த பெரியம்மாள் (85) அளித்த மனுவில், எனக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகன் இறந்துவிட்டாா். இந்நிலையில் எனது பெயரில் இருந்த சொத்தினை பேரனுக்கு (மகனின் மகன்) பெயருக்கு எழுதிக் கொடுத்தேன். மருமகளும், பேரனும் சொத்தை எழுதி வாங்கிக் கொண்டதுடன் என்னை கவனிக்க மறுக்கின்றனா். எனவே பேரனுக்கு நான் எழுதிக் கொடுத்த சொத்துப் பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அலைக்கழிப்பு

கோவை, ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த சாரதா (83) அளித்த மனுவில், எனது கணவா் கிருஷ்ணன் உண்னி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்று வந்தாா். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அவா் உயிரிழந்துவிட்டாா்.

கணவா் இறந்த பின் எனக்கு வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்காக 4 ஆண்டுகளாக 15 தடவைக்கு மேல் மனு அளித்து போராடி வருகிறேன். இதுவரை கிடைக்கவில்லை. எனவே குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Image Caption

கோவையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT