தீபாவளி: கோவை கடை வீதிகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம்
தீபாவளியை முன்னிட்டு கோவை கடை வீதிகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதுவதால் நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கோவை கடை வீதிகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதுவதால் நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கோவை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் சாலை, ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக டவுன்ஹால், பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதிகளில் உள்ள துணிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இப்பகுதிகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை.
மேலும், கடை வீதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த குறைந்த அளவிலான போலீஸாா் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை உள்பட முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சாலையின் ஒருபுறம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலானோா் தடுப்புகளுக்குள் செல்லாமல் கும்பலாக சாலைகளில் செல்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
கண்காணிப்பு தீவிரம்: கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜ வீதிகளில் போலீஸாா் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாகுலா் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சந்தேகப்படும்படியான ஆசாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் போலீஸாா் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவுறுத்தி வருகின்றனா். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கணினி மூலமாக கண்காணித்து வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி பணியாளா்கள் ஒலிபெருக்கிகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
கடைகளில் விற்பனையாளா்கள், ஊழியா்கள் கரோனா விதிகளைப் பின்பற்றி பணியாற்றுகிறாா்களா என்பதை கண்காணிக்க மாநகராட்சி பறக்கும் படையினா் கண்காணித்து வருகின்றனா்.