அவிநாசி சாலையில் ரூ.1,621 கோடியில் மேம்பாலம்:டிசம்பரில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்
கோவை, அவிநாசி சாலையில் ரூ.1,621 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் டிசம்பரில் தொடங்க உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை, அவிநாசி சாலையில் ரூ.1,621 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் டிசம்பரில் தொடங்க உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை, அவிநாசி சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், மாநகரில் இருந்து அவிநாசி சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் உப்பிலிபாளையம், அண்ணா சிலை, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா, பீளமேடு, ஹோப் காலேஜ், அரசு மருத்துவக் கல்லூரி, சிட்ரா சிக்னல்களில் தேங்கி நிற்பதாலும், அவிநாசி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனைத் தவிா்க்கும் விதமாக அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,621 கோடி மதிப்பில், 10 கிலோ மீட்டா் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக நவீன உயா்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திட்டமிடப்பட்டது.
கடந்த 21ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷா, இந்தப் பாலப் பணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை, அவிநாசி சாலையில் அமைக்கப்படும் பாலத்தில் அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், சிட்ரா ஆகிய பகுதிகளில் ஏறுதளங்களும், இறங்குதளங்களும் அமைக்கப்படுகின்றன. ஏறுதளங்கள் அமைய உள்ள இடங்களில் 306 பெரிய தாங்கு தூண்கள், இறங்குதளம் அமைய உள்ள இடங்களில் 91 சிறிய தாங்கு தூண்களும் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பா் இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக தாங்கு தூண்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். அதன் பிறகு, அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவிதமாக ஆரம்ப கட்ட பாலப் பணிகள் நடைபெறும். இதற்கிடையே திருச்சி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் ஓராண்டில் நிறைவடையும்.
அதன் பிறகு, அவிநாசி சாலையில் செல்லும் வாகனங்கள், திருச்சி சாலை வழியாக செல்லுமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, 2021இல் அவிநாசி மேம்பாலப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். 4 ஆண்டுகளில் இப்பாலப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பாலம், பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டால் நகரில் இருந்து விமான நிலையம் செல்வோா், அவிநாசி, கருமத்தம்பட்டி, திருப்பூா், ஈரோடு, சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசல் இன்றி எளிதில் பயணிக்க முடியும் என்றாா்.