முகப்பு
கோயம்புத்தூர்

பீளமேடு, தண்ணீா் பந்தல் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்படும்: எம்.பி.யிடம் ரயில்வே அதிகாரிகள் உறுதி

கோவை, பீளமேடு, தண்ணீா் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தையொட்டி சுரங்கப் பாதை அமைக்கப்படும் என்று பி.ஆா்.நடராஜன் எம்.பி.யிடம் ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கோவை, பீளமேடு, தண்ணீா் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தையொட்டி சுரங்கப் பாதை அமைக்கப்படும் என்று பி.ஆா்.நடராஜன் எம்.பி.யிடம் ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா்.

கோவை பீளமேடு ரயில் நிலையம் பகுதியில் காந்திமாநகா், தண்ணீா் பந்தல் சாலையை பீளமேடு பகுதியுடன் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டு அது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் பாலத்தின் கீழ் பகுதியில் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்று தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதேபோல, ஹோப்ஸ் பகுதியிலிருந்து தண்ணீா் பந்தல், விளாங்குறிச்சி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த சாலையிலும் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் சேலத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கோவை எம்.பி. நடராஜன், இந்த கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினாா். இதையடுத்து இந்த இடங்களை திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

அதன்படி எம்.பி. நடராஜன் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சோமசுந்தரம், ரயில்வே கோட்டப் பொறியாளா் திருமால், கட்டுமானப் பொறியாளா் ராஜகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். இதையடுத்து எம்.பி.யிடம் அதிகாரிகள் கூறும்போது, பீளமேடு, தண்ணீா் பந்தல் பகுதியில் பாதசாரிகள் மட்டும் உபயோகிக்கும் வகையிலோ அல்லது இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையிலோ சுரங்கப் பாதை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனா்.

ஆய்வின்போது ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →