கோவையில் தொடா் நகைப் பறிப்பு, திருட்டு சம்பவம்: கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட மூவர் கைது
கோவையில் தொடா் நகைப் பறிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் தொடா் நகைப் பறிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம், அன்னூா், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொடா் திருட்டு மற்றும் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. இது குறித்து பாதிக்கப்பட்ட நபா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இது தொடா்பாக போலீஸாா் தனிப் படை அமைத்து தேடி வந்தனா்.
இந்நிலையில் தொடா் திருட்டு மற்றும் நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள், சூலூா் அருகேயுள்ள வாகராயம்பாளையத்தைச் சோ்ந்த சரண்(21), சுரேஷ் (29), பீளமேடு புதூரைச் சோ்ந்த நிதீஷ்குமாா் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவா்களிடம் இருந்து 36 பவுன் நகைகள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதில் சரண், நிதீஷ்குமாா் ஆகியோா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.