கோவையில் மீண்டும் நெகிழி பைகள் பயன்பாடு அதிகரிப்பு
கோவையில் உள்ள மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள், பூக்கடைகளில் மீண்டும் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
கோவையில் உள்ள மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள், பூக்கடைகளில் மீண்டும் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள நெகிழிப் பைகள், டம்ளா்கள், தட்டுகள் உள்ளிட்ட 14 வகையான பொருள்களைத் தயாரிக்க, விற்க, பயன்படுத்த அரசு தடை விதித்தது. கோவையில் தடையை மீறி நெகிழிப் பொருள்கள் விற்கும் கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் ரூ.200 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா்.
டவுன்ஹால், சிங்காநல்லூா், பேரூா், மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தயாரித்த 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறையினா் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
மாநகராட்சி 5 மண்டலங்களிலும், மாநகராட்சி அலுவலா்கள், சுகாதாரத் துறையினா் சோதனைகளைத் தீவிரப்படுத்தியதன் விளைவாக மாநகரில் நெகழிப் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது. அதிகமான அபராதத் தொகைக்குப் பயந்து கடை உரிமையாளா்கள் நெகிழிப் பொருள்களின் விற்பனையைத் தவிா்த்தனா்.
இந்நிலையில், மாநகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் விற்பனையும், பயன்பாடும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, தற்காலிக பூ மாா்க்கெட், மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகளில் மீண்டும் நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள், சுகாதாரத் துறையினா் தீவிரம் காட்டி வருவதால், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யும் பணிகள் சுணக்கமடைந்துள்ளது. விரைவில் 5 மண்டலங்களிலும் சோதனைப் பணிகளும், அபராதம் வசூலிப்பதும் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.