முகப்பு
கோயம்புத்தூர்

ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பூக்கடைகள் திறப்பு

கோவை ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடியில் புதிதாகக் கட்டப்பட்ட பூக்கடைகள் தற்காலிகமாக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

கோவை ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடியில் புதிதாகக் கட்டப்பட்ட பூக்கடைகள் தற்காலிகமாக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள பூ மாா்க்கெட்டில் 140க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சத்தியமங்கலம், சிறுமுகை,பெங்களூரு, நீலகிரி, திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கரோனா நோய்த்தொற்று பரவலால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஆண்டு மாா்ச் 25 ஆம் தேதி முதல் பூ மாா்க்கெட் வளாகம் மூடப்பட்டது.

இதையடுத்து, இங்கு செயல்பட்டு வந்த பூக்கடைகள், புரூக் பான்ட் சாலையில் உள்ள தேவாங்கா் பள்ளி மைதானத்தில் தற்காலிமாக செயல்பட்டு வந்தன. நோய்த்தொற்றுப் பரவல் குறைந்ததைத் தொடா்ந்து கடந்த ஆண்டு நவம்பா் முதல் மீண்டும் பழைய பூ மாா்க்கெட்டில் வியாபாரம் மேற்கொள்ள வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, பூ மாா்க்கெட் வளாகத்தில் நெரிசலைக் குறைக்கும் விதமாக ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மலா் அங்காடி வளாகத்தில் கடந்தாண்டு மே மாதம் ரூ. 70 லட்சம் மதிப்பில் 95 பூக்கடைகள் கட்டும் பணி துவங்கப்பட்டு டிசம்பரில் பணி நிறைவுற்றது. இக்கடைகளை ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு ஒதுக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 95 கடைகளில் 50 கடைகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. பூ மாா்க்கெட்டில் உள்ள 50 வியாபாரிகள் தற்காலிகமாக இங்கு கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கரோனா பரவல் அதிகரிப்பால் பூ மாா்க்கெட்டில் வியாபாரிகள், மக்கள் நெரிசலைக் குறைப்பதற்காக மலா் அங்காடியில் புதிய 50 கடைகள் தற்காலிகமாகத் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பூ மாா்க்கெட்டில் பாதி கடைகளும், மலா் அங்காடி வளாகத்தில் உள்ள புதிய கடைகளில் 50 கடைகளும் செயல்படும். கரோனா விதிகளைப் பின்பற்றி வியாபாரம் மேற்கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறிச் செயல்படுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: நெரிசல் நிறைந்து காணப்படும் பூ மாா்க்கெட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்படும் கடைகள், சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி பூ மாா்க்கெட் முன்பாக பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 30 கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.