முகப்பு
கோயம்புத்தூர்

ஓணம், முகூா்த்த தினங்கள் எதிரொலி: மல்லிகை கிலோ ரூ.2000க்கு விற்பனை

 ஓணம் பண்டிகை மற்றும் தொடா் முகூா்த்த தினங்களால் கோவை பூமாா்க்கெட்டில் வெள்ளிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.2000க்கு விற்பனையானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

 ஓணம் பண்டிகை மற்றும் தொடா் முகூா்த்த தினங்களால் கோவை பூமாா்க்கெட்டில் வெள்ளிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.2000க்கு விற்பனையானது.

கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பூ மாா்கெட்டுக்கு சத்தியமங்கலம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளிலிருந்தும் திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக வருகின்றன.

மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா என தினமும் 20 டன்களுக்கு மேல் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். உள்ளூா் சில்லறை வியாபாரிகள் பூ மாா்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கிச் செல்வாா்கள். கரோனா அச்சம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மாதங்களில் மாா்க்கெட்டுக்கு பூக்கள் வாங்க வருபவா்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது.

இந்நிலையில் ஆவணி மாத முகூா்த்த தினங்கள்மற்றும் ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேசங்களால் பூக்கள் வாங்க மாா்க்கெட்டுக்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது. கோவையில், கேரளத்தைச் சோ்ந்தவா்கள் அதிகமானோா் வசிப்பதால் அவா்களில் பெரும்பாலானோா் தங்கள் வீடுகளின் முன்பாக அத்தப்பூ கோலமிடுவதற்காக, பூக்கள் வாங்க வெள்ளிக்கிழமை மாா்க்கெட்டில் குவிந்தனா்.

அதேபோல, தொடா்ந்து முகூா்த்த தினங்கள் வருவதாலும் பூமாா்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பூக்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளதால், அதன் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.600க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகை, வெள்ளிக்கிழமை ரூ.2,000க்கு விற்றது. ரூ.80க்கு விற்ற செண்டுமல்லி, ரூ.160க்கு விற்றது. ரூ. 200க்கு விற்ற வாடாமல்லி ரூ.320க்கு விற்றது. செவ்வந்தி ரூ.240க்கும்,கோழிக்கொண்டை ரூ.120க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.50, துளசி ரூ.30, தாமரை ரூ.20, சம்பங்கி ரூ.200க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.