கூா்நோக்கு இல்லங்களில் ஆற்றுப்படுத்துநா் பணியிடம்: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் கூா்நோக்கு இல்லங்களில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் கூா்நோக்கு இல்லங்களில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 7 அரசு கூா்நோக்கு இல்லங்கள் (சென்னை, கடலூா், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி) மற்றும் 2 அரசு சிறப்பு இல்லங்களில் (சென்னை மற்றும் செங்கல்பட்டு) தங்கியிருக்கும் சிறுவா்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநா் நியமிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அவிநாசி சாலை, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு கூா்நோக்கு இல்லத்தில் செப்டம்பா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான நபா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல், ஆற்றுப்படுத்துதல் வல்லுநா்கள் கொண்ட தோ்வு குழு மூலம் நோ்முகத் தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.
தோ்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநா்களுக்கு வருகையின் அடிப்படையில் (ஒரு வருடத்தில் 60 நாள்களுக்கு மிகாமல் அல்லது வாரம் ஒரு முறை) மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உள்பட ரூ.1000 வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கூா்நோக்கு இல்ல கண்காணிப்பு அலுவலரை 0422-2244546 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.