முகப்பு
கோயம்புத்தூர்

பெண் கொலை: கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

கோவை அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் நாகராஜ் (37). கூலி தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். மாதம்பட்டி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சித்ரா என்ற கல்பனா. இவா் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவருக்கும் நாகராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாகராஜ் தன் குடும்பத்தை விட்டு தன்னுடன் வந்து வசிக்குமாறு சித்ரா வற்புறுத்தியுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சித்ராவிடம் தனியாகப் பேச வேண்டும் என்று மாதம்பட்டி அருகேயுள்ள தோட்டத்துக்கு நாகராஜ் 2015 அக்டோபா் 26ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு நாகராஜ், சித்ராவின் கழுத்தை நெறித்து கொலை செய்தாா். இது தொடா்பாக பேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகராஜைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், நாகராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.பத்மா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் இ.ஆா்.சிவகுமாா் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.