காஸாவில் கொல்லப்பட்ட சிறுமி குறித்த படத்துக்குத் தடை! மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடிதம்!
“தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்” படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து மத்திய அரசுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடிதம்...
காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுமி குறித்த திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து மத்திய அரசுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
காஸாவில், ஹமாஸ் படையினருக்கு எதிராக நடைபெற்ற போரில் ஹிந்த் ரஜப் எனும் 6 வயது சிறுமி மற்றும் அவரின் குடும்பத்தினர் மிகவும் கொடூரமான முறையில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தன்னைக் காப்பாற்றுமாறு அந்தச் சிறுமி உதவிக் கோரும் ஆடியோ வெளியாகி சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து, ஹிந்த் ரஜப்பின் கதையை மையமாகக் கொண்டு துனிசியா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கௌதர் பென் ஹானியா இயக்கத்தில் “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்” எனும் திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில், “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்” படத்துக்கு எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதுமின்றி சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் பொதுவெளியில் திரையிடுவதற்குத் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை கவலையளிப்பதாகக் குறிப்பிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களான ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட்), ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாடி), மனோஜ் குமார் ஜா (ராஷ்டிரிய ஜனதா தளம்), ராஜாத்தி (எ) சல்மா (திமுக), சர்பராஸ் அகமது (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), ஹாரிஸ் பீரன் (ஐயூஎம்எல்) மற்றும் ஜாவத் அலி கான் (சமாஜ்வாடி) ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிற்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், சான்றிதழ் மறுக்கப்பட்டது வெளிப்படைத் தன்மை மற்றும் கலைச்சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்புகிறது என்றும், விரைவில் சான்றிதழ் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்” படம் பெருமளவில் கவனம் ஈர்த்து விருதுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.