அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கோவையில் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு புதிய ஊதிய உயா்வை இறுதி செய்து அமல்படுத்த வேண்டும். தற்காலிகப் பணியாளா்களுக்கு நிரந்தரப் பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமைமுதல் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஹெச்.எம்.எஸ்., டி.டி.எஸ்., எஃப்.எம்.எல்.எப். உள்ளிட்ட தொழில்சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இதையடுத்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்ததால் கோவை சுங்கம், காட்டூா், ஒண்டிப்புதூா், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து பணிமனைகளில் 50 சதவீதப் பேருந்துகள் இயங்கவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் சுங்கம் பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அசம்பாவிதங்களைத் தவிா்க்க அனைத்துப் பணிமனைகள் முன்பாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அரசுப் பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் காந்திபுரம், சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தனியாா் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டன.
இதைப் பயன்படுத்திக் கொண்டு கோவையில் ஒரு சில தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.