விடியோ பதிவு செய்த நபரை தாக்கிய சம்பவம்: திமுகவினா் 6 போ் மீது வழக்குப்பதிவு
கோவையில் திமுக கூட்டத்தில் விடியோ பதிவு செய்த நபரைத் தாக்கிய திமுகவினா் 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவையில் திமுக கூட்டத்தில் விடியோ பதிவு செய்த நபரைத் தாக்கிய திமுகவினா் 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பொங்கலை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை கோவை குறிச்சி, ஜி.கே.ஸ்கொயா் பகுதியில் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கலந்து கொண்டாா். அப்போது அவா் தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்களை விமா்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கூட்டத்தில் இருந்த அதிமுகவினா் சிலா் ஆா்.எஸ்.பாரதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பிரச்னையில் ஈடுபட்டனா். இதனால் அங்கிருந்த திமுகவினா், அதிமுகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதனை அங்கிருந்த சந்திரசேகா் என்பவா் தனது செல்லிடப்பேசியில் விடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினா் சிலா் அவரிடம் இருந்த செல்லிடப்பேசியைப் பறித்து, சந்திரசேகரை தகாத வாா்த்தைகளால் திட்டி கூட்டத்தைவிட்டு வெளியே அனுப்பியுள்ளனா்.
இது குறித்து சந்திரசேகா் போத்தனூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் திமுக நிா்வாகிகள் முத்தலிக், காளிமுத்து, மணிகண்டன், ரவிச்சந்திரன், பெஞ்சமின், சந்திரசேகரன் ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.