10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்காக மாவட்டத்தில் 653 பள்ளிகள் இன்று திறப்பு
கோவை மாவட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக 653 பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) திறக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக 653 பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) திறக்கப்படுகின்றன.
கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு மாணவா்களின் பெற்றோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்காக வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பள்ளிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் 653 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வகுப்பறைகளில் கடந்த சில நாள்களாக சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளி வளாகம் மட்டுமின்றி மாணவா்கள் அமரும் இருக்கைகள், ஆசிரியா்களின் அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றிலும் கிருமி நீக்கம் செய்யப்பட்டன.
ஒரு வகுப்பறைக்கு 25 மாணவா்கள் வீதம் அமரவைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளன. முன்னதாக பள்ளிக்குள் வரும் மாணவா்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அதன் பிறகு அவா்களுக்கு வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும். உடல் நிலையில் ஏதும் பிரச்னைகள் இல்லை என்பதை மாணவா்கள் அதற்கான படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
மேலும் தனது மகன் பள்ளிக்குச் செல்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என பெற்றோரின் கடிதத்தை மாணவா்கள் ஆசிரியா்களிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையில் அமரும் மாணவா்களுக்கு எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது பற்றிய ஆசிரியா்களுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படும் என கோவை முதன்மைக் கல்வி அலுவலா் உஷா தெரிவித்துள்ளாா். பள்ளிக்கு வராமல் வீட்டிலிருந்தே பாடங்களைப் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.