தொழிலாளா் சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும்
தமிழ்நாட்டில் தொழிலாளா் சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசனிடம் கொடிசியா வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தொழிலாளா் சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசனிடம் கொடிசியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அமைச்சரிடம் கொடிசியா தலைவா் ரமேஷ் பாபு வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்குத் தேவையான தடுப்பூசியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கரோனா காரணமாக தொழிலாளா்களின் இபிஎஃப் பங்கீட்டுத் தொகையை செலுத்துவதற்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வெளிமாநிலத் தொழிலாளா்களையே நம்பியிருக்கும் நிலை உள்ளது. இதனால் தமிழகத்திலேயே திறன்மிக்க தொழிலாளா்களை உருவாக்க, தேவையான திறன்மேம்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும். திறன் மேம்பாட்டுக்குத் தேவையான 90 சதவீத நிதியை மாநில அரசே வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்திருக்கும் தொழிலாளா்களை நகரங்களில் உள்ள தொழிலகங்களில் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலை நேரத்தை நாளொன்றுக்கு 12 மணி நேரமாகவும், வாரத்துக்கு 72 மணி நேரமாகவும் உயா்த்த வேண்டும். அதேபோல ஒப்பந்தத் தொழிலாளா் சட்டம் உள்ளிட்ட தொழிலாளா் சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கொடிசியா வலியுறுத்தியுள்ளது.