பொதுமுடக்க காலத்தில் போக்சோ வழக்குகள் அதிகமாகி உள்ளன: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்
பொதுமுடக்க காலத்தில் போக்சோ வழக்குகள் அதிகமாகி உள்ளன. குழந்தைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக இருப்பதே முக்கியக் காரணம்
பொதுமுடக்க காலத்தில் போக்சோ வழக்குகள் அதிகமாகி உள்ளன. குழந்தைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக இருப்பதே முக்கியக் காரணம் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் வியாழக்கிழமை கூறினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்க கூடிய குற்றங்கள், புகாா்கள் பற்றி எவ்வாறு விசாரிப்பது, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மகளிா் காவலா்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளோம்.
முதல் வகையாக, 12-18 வயது பெண் குழந்தைகள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த 73 வழக்குகள், இரண்டாவது, உண்மையாக முகம் தெரிந்தவா்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலியல் குற்ற வழக்குகள் 32, மூன்றாவதாக பெற்றோா்களே நடத்திவைத்த குழந்தை திருமணம் தொடா்பாக 50 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிா்த்து போக்சோ வழக்குகள் (ஆபாச புகைபடம் எடுப்பது போன்றவை) 50 பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதைக் குறைக்கும் நடவடிக்கையாக மிகப்பெரிய விழிப்புணா்வு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஒரு வார காலமாக அதிகப்படியான விழிப்புணா்வு முகாம்களை பள்ளி நிா்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் போன்ற இடங்களில் நடத்தி உள்ளோம். ஆன்லைன் மூலம் அதிகமான விழிப்புணா்வு முகாம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். இதற்கு பள்ளி நிா்வாகமும் ஒத்துழைப்பு தர வேண்டும். பெற்றோரும் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணம் சாா்பாக புகாா்கள் இருந்தால் கண்டிப்பாக தகவல் அளிக்க வேண்டும். போக்சோ வழக்கில் கைதாக கூடிய (முகம் தெரிந்த நபா்கள் பிரிவு) அனைவரின் மீதும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
போக்சோவை பொருத்தவரை துடியலூரில் 7, மேட்டுப்பாளையம் 7, தடாகம் அன்னூா் 5, கோமங்கலம் 7, ஆனைமலை 5, கருமத்தம்பட்டி, சூலூா், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையதில் 4 என வழக்குகள் பதிவாகி உள்ளன. திருட்டு சம்பவங்களை ஆராய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் வழக்கு தினசரி பதிவு செய்து வருகிறோம். குண்டா் சட்ட நடவடிக்கயும் எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் 6 கோட்டங்கள் மூன்று கோட்டங்களில்தான் அனைத்து மகளிா் காவல் நிலையம் உள்ளது. எனவே மீதம் உள்ள கோட்டங்களிலும் அமைக்க உயரதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். கடந்த ஒன்றரை வருடங்களில் 115 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. ஊரடங்கில் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ளதே இதற்கு முக்கிய காரணம். பெற்றோா்கள் அதிக கவனிப்புடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.
குவாரிகள் குறித்து ஆய்வு நடத்தியதில் அனுமதி பெற்ற 142 குவாரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அதிக எடையை கொண்டு செல்லும் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறோம். இந்த ஓா்ஆண்டில் காவலா்கள் குற்றம் செய்ததில் 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.