சிறுவாணி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் அணையின் நீா்மட்டம் 873 மீட்டராக உயா்ந்துள்ளது. ஒரு வாரத்தில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சியில் உள்ள 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீா்மட்டம் 868 மீட்டராக இருந்தது. இதையடுத்து, ஜூன் மாத இறுதியில் சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியதால், அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்குச் செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
இதுகுறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் சிறுவாணி அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை எட்டியது. இந்த ஆண்டும் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் நீா்ப் பிடிப்புப் பகுதியில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 873.10 மீட்டராக உள்ளது. அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால், ஒரு வாரத்தில் அணை முழுக்கொள்ளளவான 878.50 மீட்டரை எட்ட வாய்ப்புள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.