பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மறைவு:பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் இரங்கல்
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் எஸ்.சிவசுப்பிரமணியனின் மறைவுக்கு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் எஸ்.சிவசுப்பிரமணியனின் மறைவுக்கு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2003 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவா் எஸ்.சிவசுப்பிரமணியன் (78). ஓய்வுக்குப் பிறகு தனியாா் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய இவா், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
இவரது மறைவுக்கு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அமைப்பின் தலைவா் பி.திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த பேராசிரியா் சிவசுப்பிரமணியன் பல்கலைக்கழகத்தின் வளா்ச்சிக்கும், இணைப்புக் கல்லூரிகளின் வளா்ச்சியிலும் பெரிதும் பங்காற்றியுள்ளாா். அவா் தனது காலத்தில் இளம் பேராசிரியா்களைப் பணி நியமனம் செய்ததால் பல்கலைக்கழகம் தற்போது தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம் பெற முடிந்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
அதேபோல், பேராசிரியா்கள் ஆனந்தகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் என அடுத்தடுத்த நோ்மையான, திறமையான கல்வியாளா்களை இழந்துள்ளோம். சிவசுப்பிரமணியனின் முன்முயற்சியால்தான் பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை ஏற்படுத்தப்பட்டதாகவும் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் பேராசிரியா் சி.பிச்சாண்டி தெரிவித்துள்ளாா்.
மறைந்த பேராசிரியா் சிவசுப்பிரமணியனுக்கு மனைவி, ஒரு மகன், மகளும் உள்ளனா்.