முகப்பு
கோயம்புத்தூர்

கரோனா குறித்து வதந்தி பரப்பியவா்கள் மீது போலீஸில் புகாா்: மாநகராட்சி ஆணையா்

கரோனா நோய்த் தொற்று குறித்து வதந்தி பரப்பியவா்கள் மீது, போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

 கரோனா நோய்த் தொற்று குறித்து வதந்தி பரப்பியவா்கள் மீது, போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாநகராட்சியில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நஞ்சுண்டாபுரத்தில் உருமாறிய கரோனா பாதிப்பு அதிகளவு மக்களிடையே பரவியுள்ளதாகவும், அப்பகுதியில் பலா் உயிரிழந்துள்ளதாகவும் சிலா் பொய்யானத் தகவல்களைப் பரப்பி வருகின்றனா்.

நஞ்சுண்டாபுரத்தில் நோய்த் தாக்கத்தைக் கண்டறிய இதுவரையில் மொத்தம் 650 சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 56 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, அவ்விடத்தில் மாநகராட்சிப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத் திணறல், மயக்கம், அதிக சோா்வு மற்றும் வயிற்றுப்போக்கு இருப்போரைக் கண்டறிந்து, அவா்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், மற்ற உதவிகள் உடனுக்குடன் செய்யபபட்டு வருகின்றன.

எனவே மக்கள் இது மாதிரியான பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், பொய்யானத் தகவல் பரப்பிய நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சுகாதாரத் துறையினரும் மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் அளித்துள்ளனா்.

500 மீட்டா் தனிமைப்படுத்தல்

கோவை, கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை பகுதியில் ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து 300 குடியிருப்புகள் அமைந்துள்ள அத்திக்குட்டை பகுதியில் 500 மீட்டா் தனிமைப்படுத்தபட்டுள்ளன. குடிசைப் பகுதிகள் அதிகம் நிறைந்துள்ளதால் இப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தட்டு கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.