கோயம்புத்தூர்

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு

DIN

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி. இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி இந்தப் பள்ளியில் படிக்க விருப்பமில்லை. வேறு பள்ளியில் தன்னைச் சேர்த்து விடுமாறு தனது பெற்றோர்களிடம் தெரிவித்து வந்தார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அவரைக் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர். இருப்பினும் அந்த மாணவி கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர், சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து தற்கொலை வழக்குப் பதிவு செய்த உக்கடம் போலீஸார் பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறுமி முன்னர் படித்த தனியார் பள்ளியில் வேலை பார்த்த இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் சிறுமிக்கு அளித்த தொடர் பாலியல் தொல்லைகளால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு உக்கடம் காவல் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கு முன்னதாக மாணவி எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாவும் அதில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி உள்பட மூவரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அண்மையில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, மாணவியிடம் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், ஆன்லைன் வகுப்புகளில் எனது மகளிடம் அந்த ஆசிரியர் தவறான முறையில் பேசியதை சக மாணவர்கள் பார்த்துள்ளனர். மேலும், பள்ளி வாசலில் காத்திருந்த எனது மகளை வீட்டின் அருகே இறக்கிவிடுவதாகக் கூறி அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளார். பள்ளியில் தனியாக இருந்தபோதும் எனது மகளிடம் அந்த ஆசிரியர் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து பள்ளியில் புகார் அளித்தபோது, இதுபற்றி பெரிதுப்படுத்த வேண்டாம் என எங்களிடம் பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். இதன் பின்னரே நாங்கள் எங்களது மகளை வேறு பள்ளியில் சேர்த்தோம். ஆனால், அந்த ஆசிரியர் தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் எனது மகளுக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளார் என்றனர்.

பள்ளி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்டிபிஐ, தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்பினர் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளி தாளாளரை உடனடியாகக் கைது செய்து பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கோவை மாவட்ட கல்வி அலுவலர் கீதா, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். 

ஆசிரியர் மீதான புகார் குறித்து பள்ளி நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT