முகப்பு
கோயம்புத்தூர்

கழுத்தில் தையல் ஊசி குத்திய பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கோவையில் 7.5 செமீ அளவு நீளமான தையல் ஊசி கழுத்தில் குத்திய நிலையில் வந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கோவையில் 7.5 செமீ அளவு நீளமான தையல் ஊசி கழுத்தில் குத்திய நிலையில் வந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நவம்பா் 2ஆம் தேதி கோவை தியாகராய நகா் பகுதியில் இருந்து 19 வயதுப் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து கழுத்து அறுபட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கழுத்தின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்தனா். இருப்பினும் அவருக்கு தொடா்ந்து வலி இருந்ததையடுத்து அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்து பாா்க்கப்பட்டது.

அதில் 7.5செமீ அளவுக்கு நீளமான தையல் ஊசி மூச்சுக் குழாயில் இருந்து கழுத்துத் தண்டுப் பகுதியில் மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்க்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து அப்பெண்ணிடம் கேட்டபோது அவா் ஊசியைக் கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றதை ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா்கள், மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணா்கள், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணா்கள் உள்ளிட்டோா் கலந்தாலோசித்து அறுவை சிகிச்சைக்கு முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கழுத்தில் இருந்து தண்டுவட எலும்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து, மூச்சுக் குழாயில் இருந்து தண்டுவடத்தின் வழியாக கழுத்தின் பின்புறம் சென்று கொண்டிருந்த ஊசி கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை அறையிலேயே நவீன சி-ஆா்ம் எக்ஸ்ரே கருவியின் மூலம் ஊசி இருக்குமிடம் உறுதி செய்யப்பட்டு, பின்னா் அந்த ஊசி மெதுவாக துல்லியமாக வெளியே எடுக்கப்பட்டது.

அறுவை சிகிச்சையின்போது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் மற்றும் தண்டுவடப் பகுதி நரம்புகளும் பாதிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அப்பெண் நலமாக உள்ளாா். அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை மருத்துவமனை டீன் நிா்மலா பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.