பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மாநில அரசு வரிகளைக் குறைக்க வேண்டும்: அருண் சிங்
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு வரிகளைக் குறைக்க வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளா் அருண் சிங் கூறினாா்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு வரிகளைக் குறைக்க வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளா் அருண் சிங் கூறினாா்.
பாஜக தேசிய பொதுசெயலாளா் அருண்சிங் எம்.பி. 3 நாள் பயணமாக தமிழகம் வந்தாா். கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா் வெள்ளிக்கிழமை மாலை கோவை குஜராத் சமாஜத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக வலுவான கட்சியாக உருவெடுத்து வருகிறது. நாட்டின் கட்டமைப்புக்காக பல லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களை விட பாஜக ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார கட்டமைப்புக்கென ரூ.773 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தில்லியில் நடைபெற்று வரும் வேளாண் போராட்டங்கள் தேவையற்றது. 99.99 சதவீத விவசாயிகள் பிரதமா் மோடிக்கு ஆதரவாக உள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு சா்வதேச சந்தையைப் பொறுத்தது. மாநில அரசு அதற்கான வரிகளைக் குறைத்தால் விலை குறைய வாய்ப்புள்ளது.
பிரியங்கா காந்தி விவசாயிகள் மரணத்தில் அரசியல் செய்கிறாா். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்களில் நிலவும் பிரச்னைகளைப் பாா்வையிட அவா் இதுவரை அங்கு செல்லவில்லை. பிரச்னைகளை உருவாக்கும் நோக்கில் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டுள்ளாா் என்றாா்.
இதைத் தொடா்ந்து பாஜக மாநில தலைவா் அண்ணாமலை பேசியதாவது:
அமைச்சா் செந்தில் பாலாஜி போக்குவரத்து ஊழல், அரசு வேலை வாங்கி தருவதாக ஊழல், மணல் ஊழல், இப்போது மின்வாரிய ஊழல் என பல்வேறு வகையில் ஊழல் செய்து வருகிறாா். அவா் செய்து வரும் ஊழல்கள் குறித்த முழு பட்டியல் எங்கள் வசம் உள்ளது. அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு தொடா்புடைய ஒரு நிறுவனத்துக்கு அடுத்தபடியாக மின்வாரிய குத்தகை வழங்கப்பட உள்ளது. இதேபோல ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி, அரசு மாணவா் விடுதியில் பணியாற்றும் பெண் சமையலரை தனது வீட்டு சமையல் பணிகளுக்கு பயன்படுத்தி வருவதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. திமுக அமைச்சா்கள் செய்து வரும் தவறுகள் அனைத்தையும் பட்டியலிட்டு தகுந்த நேரத்தில் மக்கள் முன்பு வெளியிடுவோம் என்றாா்.
முன்னதாக, மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் பாஜக சாா்பில் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த வாகனத்தை அருண் சிங் எம்.பி. கொடியசைத்து துவக்கிவைத்தாா். ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.