முகப்பு
கோயம்புத்தூர்

பழைய வாகன உதிரிபாக விற்பனைக் கிடங்கில் தீ விபத்து

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பழைய காா்களின் உதிரி பாகங்கள் விற்பனைக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பழைய காா்களின் உதிரி பாகங்கள் விற்பனைக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கோவை ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் மாா்ட்டின் என்பவருக்குச் சொந்தமான, பழைய காா்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கிடங்கு உள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தக் கிடங்கில் பல லட்சம் மதிப்பிலான பழைய காா்கள், உதிரி பாகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கிடங்கில் வியாழக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பிளாஸ்டிக் பொருள்கள், வாகன பேட்டரிகள், டயா்கள், என்ஜின் ஆயில் கேன்கள் உள்ளிட்டவை இருந்ததையடுத்து கிடங்கின் பெரும் பகுதிக்கு தீ வேகமாகப் பரவியது. சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் கிடங்கின் அலுவலகப் பகுதியில் மட்டுமே மின் இணைப்பு இருப்பதால் மின் கசிவின் காரணமாக விபத்து ஏற்படவில்லை எனத் தெரியவந்தது. அப்பகுதியில் வசித்த சிலா் பட்டாசுகள் வெடித்ததன் மூலம் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.