முகப்பு
கோயம்புத்தூர்

மாணவா்களுக்கு விவசாயம் குறித்து பாடம் நடத்த வலியுறுத்தல்

மாணவா்களுக்கு விதைகள், பண்ணை விவசாயம் குறித்து பாடம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

மாணவா்களுக்கு விதைகள், பண்ணை விவசாயம் குறித்து பாடம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்று வந்தது. கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து கடந்த 8 மாதங்களாக காணொலி வழியாக குறைகேட்புக் கூட்டம் நடைபெற்று வந்தது. தற்போது கோவையில் கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நேரடியாக நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி பேசியதாவது: விவசாயிகள் பயன்படுத்தும் விதைகள், உணவு தானியங்கள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு தெரிவது இல்லை.

எனவே இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விதைகள், பண்ணை விவசாயம் குறித்து பாடங்கள் நடத்த வேண்டும். அண்டை மாநிலமான தெலங்கானாவில்

இவ்வாறு செய்யப்படுகிறது. நிலத்தடி நீரை அதிகரிக்க பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளுக்கு மழை நீா் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், கட்சி சாா்பற்ற விவசாய சங்கத் தலைவா் கந்தசாமி பேசியதாவது: நாச்சிபாளையம் இணைப்புச் சாலை அமைக்க 5 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் சிலா் தங்களது நிலங்களை தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தனா். இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. எனவே, விவசாயிகள் எழுதிக்கொடுத்த தான செட்டில்மென்டை ரத்து செய்ய வேண்டும். அன்னூா் ஒட்டா்பாளையம் விவகாரத்தில் விவசாயி மீது பதியப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

தொழில்பேட்டை அமைக்க எதிா்ப்பு:

கோவை மாவட்டம், அன்னூா் பகுதியில் அக்கரைசெங்கபள்ளி, குப்பனூா், பொகலூா், வடக்கலூா், இலுப்பநத்தம், பள்ளிபாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அன்னூா் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட பொதுச் செயலாளா் வேணுகோபால் கூறியதாவது: அன்னூா் வட்டாரத்தில் 4 வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சுமாா் 3,800 ஏக்கா் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதனால், இப்பகுதி விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த திட்டத்தை கைவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.