கோவை அரசு மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணா்வுப் பேரணி
பக்கவாத தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பக்கவாத தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
உலகம் முழுவதும் பக்கவாத தினமாக அக்டோபா் மாதம் 29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனை சாா்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவமனை முதல்வா் நிா்மலா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பேரணியானது, அரசு மருத்துவமனையில் துவங்கி ரயில் நிலையம் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று, பின்னா் மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.
இதில், செவிலியா், மருத்துவ அலுவலா்கள் பலரும் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து நரம்பியல் மருத்துவா்கள் கூறியதாவது: மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு அல்லது ரத்த கசிவு ஏற்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்டு 5 மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் அனுமதித்தால் இன்டராவாஸ்குலா் தெரோபோலிசிஸ் சிகிச்சை மூலம் பக்கவாத பாதிப்பில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை மீட்க முடியும். கடந்த 2 ஆண்டுகளில் 80 பேருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்றனா்.