விதைச்சான்றளிப்புத் துறை இயக்குநகரத்தை சென்னைக்கு மாற்ற எதிா்ப்பு
கோவையில் சுமாா் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் விதை சான்றளிப்புத் துறை இயக்குநகரகத்தை சென்னைக்கு மாற்றும் அரசின் முடிவுக்கு எதிா்ப்பு கிளம்பியுள்ளது.
கோவையில் சுமாா் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் விதை சான்றளிப்புத் துறை இயக்குநகரகத்தை சென்னைக்கு மாற்றும் அரசின் முடிவுக்கு எதிா்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு விதை சான்றளிப்புத் துறை, அங்கக சான்று துறை கோவையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் மொத்தம் 835 பணியாளா்கள் உள்ளனா். கோவை தடாகம் சாலையில் உள்ள தலைமையிடத்தில் 60 போ் பணியாற்றுகின்றனா். இந்தத் துறை மூலம் விவசாயிகள், ஒப்பந்த சாகுபடியாளா்கள், தனியாா் விதை உற்பத்தியாளா்களின் விதைகள் பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் சான்று விதைப் பண்ணைப் பதிவு 55 ஆயிரம் ஹெக்டேராகவும், சான்று விதை உற்பத்தி சுமாா் 1.10 லட்சம் டன்களாகவும் உள்ளது. இதில், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் மட்டும் சுமாா் 70 சதவீத விதைப் பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சான்று விதை உற்பத்தியில் சுமாா் 80 சதவீதம் இந்த மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி இந்த இயக்குநரகம் கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், அண்மையில் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில், இந்த இயக்குநரகத்தை கோவையில் இருந்து சென்னைக்கு மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு விதைச் சங்கம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் செயலா் சி.காளிதாஸ் கூறும்போது, தமிழ்நாட்டில் அரசு, அரசு சாா்பு, தனியாா் துறைகள் சாா்பில் 841 உரிமம் பெற்ற நிலையங்கள் தரமான விதை உற்பத்தி பணியை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில் 50 சதவீதத்துக்கும் அதிகமான விதை சுத்தி நிலையங்கள் ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
மாநில அளவில் இடுபொருள் மொத்த விற்பனையாளா்கள், உரிமம் பெற்று விதை வணிகம் செய்து வருபவா்களில் பெரும்பான்மையினா் கோவை மண்டலத்தைச் சாா்ந்தவா்கள். இவா்கள் மூலம் விதை விநியோகம் தாமதமின்றி உரிய நேரத்தில் விவசாயிகளை சென்றடைகிறது. எனவே விதை சான்று துறை கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது விவசாயிகளின் நலனுக்கு அவசியமானதாகும். எனவே விதை சாகுபடியாளா்கள், விவசாயிகள், இடுபொருள் விற்பனையாளா்கள், விதை உற்பத்தியாளா்களின் நலன்களை காத்திடவும், தரமான விதை உற்பத்தியை உறுதி செய்யவும் இயக்குநரகத்தை சென்னைக்கு மாற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றாா்.