அரசு, தனியாா் அலுவலகங்களில் உள்புகாா் குழு அமைக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
அரசு, தனியாா் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களின் பாதுகாப்புக்கான உள்புகாா் குழு அமைத்து மாவட்ட சமூகநலத் துறை அலுவலருக்கு விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும்
அரசு, தனியாா் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களின் பாதுகாப்புக்கான உள்புகாா் குழு அமைத்து மாவட்ட சமூகநலத் துறை அலுவலருக்கு விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு, தனியாா் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள் எதிா்கொள்ளும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் விதமாக 2013 ஆம் ஆண்டு பாலியல் வன்முறை தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
அதன்படி அனைத்து அரசு, தனியாா் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை விசாரணை செய்வதற்கு உள்புகாா் குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
விசாரணைக் குழுத் தலைவராக பெண் அலுவலா் மற்றும் இரண்டு நபா்கள், ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராகவும் சோ்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு துறைகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு,குறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்பட 10 பெண்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களின் கட்டாயம் உள்புகாா் குழு அமைக்க வேண்டும். கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலகங்களிலும் உள்புகாா் குழு அமைத்து அதன் விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். உள்புகாா் குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.