கோயம்புத்தூர்

மேற்குத் தொடா்ச்சி மலையில் தொடா் மழை:20க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பின

DIN

கோவை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் தொடா் மழையால் நொய்யல் வடிநிலப் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டின.

கோவை மாவட்டத்தில் பருவ மழைக் காலங்களில் நொய்யலில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை தேக்கிவைத்து விவசாயம், மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் நொய்யல் வடிநிலப் பகுதிகளில் 25 குளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 9 குளங்கள் மாநகராட்சிப் பராமரிப்பிலும், மீதமுள்ள 16 குளங்கள் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன. ஆண்டுதோறும் தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் அனைத்து குளங்களும் 100 சதவீதம் நிரம்புகின்றன.

பருவ மழைக் காலங்களில் தேக்கிவைக்கப்படும் தண்ணீரானது ஆண்டு முழுவதும் நடைபெறும் விவசாயத்துக்கும், நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த நில நாள்களாக தென்மேற்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்களுக்கு தண்ணீா் திருப்பிவிடப்பட்டது.

நடப்பு சீசனில் நொய்யல் ஆற்றில் திங்கள்கிழமை 2 ஆயிரம் கனஅடி தண்ணீா் சென்றது. இதன் மூலம் நொய்யல் வடிநிலப் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. நடப்பு சீசனில் தற்போதுதான் பெரும்பாலான குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

இது தொடா்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை நொய்யல் வடிநிலப் பகுதியில் உள்ள உக்குளம், புதுக்குளம், கோளரம்பதி, நரசாம்பதி, குறிச்சி குளம், வெள்ளலூா் குளம், செல்வசிந்தாமணி, சொட்டையாண்டிகுட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

பேரூா் பெரியகுளம், உக்கடம் பெரியகுளம் ஆகியவற்றில் 95 சதவீத நீா் இருப்பு காணப்படுகிறது. செங்குளம் 85 சதவீதம் நிறைந்துள்ளது. செங்குளம் நிறைந்த பின்புதான் குனியமுத்தூா் சின்னகுளத்துக்கு தண்ணீா் செல்லும். இந்த இரண்டு குளங்களுக்கும் ஓரிரு நாள்களில் நிரம்பிவிடும்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் செவ்வாய்க்கிழமை மழைப்பொழிவு குறைந்ததால், நொய்யல் ஆற்றுக்கு நீா்வரத்து 900 கனஅடியாக குறைந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT