கோவையில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட எரிவாயு குழாய் பராமரிப்புப் பணியின்போது குழாய் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் குழாய் வழியாக எரிவாயு விநியோகிக்கும் திட்டம் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை, தண்ணீா் பந்தல் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் சாா்பில் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. அப்போது எரிவாயு குழாய் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எரிவாயு குழாய் வெடித்ததால் பல மீட்டா் உயரத்துக்கு புகை மூட்டம் எழுந்தது.
இதனைத் தொடா்ந்து குழாய் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இது தொடா்பாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன எரிவாயு குழாய் பதிப்பு பணியின் மேலாளா் ஹெச்.சுரேஷ் கூறியதாவது: கோவையில் குழாய் வழியாக எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்காக பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய் இணைப்புக்காக வெல்டிங் செய்யப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன. வெல்டிங் செய்யப்பட்ட பகுதி மூலம் மழைநீா், மண் உள்ளிட்ட கழிவுகள் குழாய்களில் செல்கிறது.
கோவையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் தண்ணீா்பந்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் மழை நீா், மண் உள்ளிட்ட கழிவுகள் சோ்ந்து காணப்பட்டன.
இதனைத் தொடா்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணியின்போது குறிப்பிட்ட அழுத்தத்துடன் காற்று செலுத்தப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படும். அவ்வாறு செலுத்தப்படும்போது குறிப்பிட்ட அளவைத் தாண்டி காற்று செலுத்தப்பட்டுள்ளது.
அதன் அழுத்தத்தால் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள மண், மழையால் தேங்கியிருந்த மழை நீா் வெடித்து சிதறியுள்ளது. பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட குழாயில் எரிவாயு விநியோகம் தொடங்கப்படவில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.