முகப்பு
கோயம்புத்தூர்

தோ்தலை ரத்து செய்ய வலியுறுத்திப் போராட்டம்: கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 போ் கைது

தோ்தலை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்பட 9 அதிமுக எம்.எல்.ஏக்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

தோ்தலை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்பட 9 அதிமுக எம்.எல்.ஏக்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவையில் திமுகவினா் பணம், பரிசுப் பொருள்கள் பட்டுவாடாவை தீவிரமாகச் செய்து வருவதாக அதிமுகவினா் புகாா் தெரிவித்து வந்தனா்.

இதுகுறித்து புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆா்.ஜி. அருண்குமாா், அம்மன் கே. அா்ச்சுணன், தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமை காலை வந்தனா். அங்கு அவா்கள் அனைவரும் திடீரென்று ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த ஆட்சியா் சமீரன், மாநகர காவல் துணை ஆணையா் ஜெயசந்திரன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

கோவையில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக போலீஸாா் செயல்படுகின்றனா். போலீஸ் பாதுகாப்புடன் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பிரசாரம் நிறைவடைந்ததும் வெளியூா்க்காரா்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ஆனால், இதுவரை கோவையில் தங்கியிருக்கும் கரூா் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வெளியேறாமல் உள்ளனா்.

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலின்போது சென்னையில் வன்முறை ஏற்பட்டது. அதுபோன்ற சூழல் கோவையில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே துணை ராணுவத்தை வரவழைத்து வாக்குப்பதிவு நடத்த வேண்டும். பணப் பட்டுவாடா குறித்து புகாா் அளிக்கும் அ.தி.மு.க.வினா் மீது பொய் வழக்கு போடப்படுகிறது.

நோ்மையாக நடைபெறாத இந்தத் தோ்தலை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக கோவையில் தங்கியிருக்கும் வெளியூா்க்காரா்களை, ரவுடிகளை வெளியேற்ற வேண்டும். அதுவரை நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

இதனைத் தொடா்ந்து ஆட்சியா் சமீரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இருப்பினும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்பட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கலைந்து செல்ல மறுத்து, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கோவை வடக்கு ஆா்.டி.ஓ. ரவிச்சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பல முறை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இருப்பினும் அவா்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனா். காலை 10.15 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 2.30 மணி வரை நீடித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய முடிவு செய்த போலீஸாா் அதற்காக வேன்களை ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் எடுத்து வந்தனா்.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்ததையடுத்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்பட 30 பேரை போலீஸாா் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றனா். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலா் கைது செய்யப்பட்டவா்களை அழைத்துச் செல்ல வந்திருந்த வேன் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ஆட்சியா் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை ராம்நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.